It gets curiouser and curiouser!

Monday, 17 December 2012

இலஞ்சம் ஒழிந்துவிட்டது!


இலஞ்சம் ஒழிந்துவிட்டது!

இலஞ்சத்தை ஒழிப்பதே தம்
இலட்சியமாய் கொண்டிருந்த

சமுதாயச் சீர்திருத்தவாதி ஒருவன்
சரியான பிரச்சாரம் செய்துவந்தபோது

பொதுமக்கள் அவனைச் சூழ்ந்து
பொறுப்பாயோர் வேண்டுகோள் விடுத்தார்கள்

"சரியான நேரத்திலே
அரிதான எம்வேலைகளை
அரியாசனத்தில் உள்ளோர்முதல்
பரிவில்லா அதிகாரிவரை
உரிமையுடனே முடித்துவைக்க
பரிந்துரைகள் செய்கின்ற
இலஞ்சத்தை ஒழிப்பதில்
இன்றுயேன் உனக்குமுனைப்பு?
அறிவில்லா இப்பிரச்சாரத்தை
அயல் நாட்டில் வைத்துக்கொள்
அறிவுள்ள இந்நாட்டில்
அநீதியை வளர்க்காதே" என்று!

இலஞ்சத்தை ஒழிப்பதே
இலட்சியமாய் கொண்டவன்
இலட்சரூபாய் கேட்டான்-தன்
இலட்சியத்தை வதைத்துக்கொள்ள!


மக்களே!
அவன் கேட்டது
இலஞ்சம் அல்ல;
தன் இலட்சியத்தை
இழப்பதற்கு அவங்கேட்ட
'இழப்பீடு'!
இதுவே தான்
மற்றவர் நிலையும்!

மக்களின் வேலையை
முடித்து வைக்க
மற்றையோர் கேட்கும்
ரொக்கம் இலஞ்சமே அல்ல!

அடுத்தவர் வேலையை
அவரே செய்ய அது
அவர் பெறும் 'சன்மானம்'!

ஆம்...
இலஞ்சம் இன்று
'சன்மானம்' , 'வெகுமதி' , 'இழப்பீடு'
என்ற பெயர்களாய் திரிந்துவிட்டது....

ஆம்...
இன்று 'இலஞ்சம்' ஒழிந்துவிட்டது.
ஆம்....
ஒழிந்தே விட்டது இன்று
'இலஞ்சம்' என்ற வார்த்தை!



சட்டம் காக்கும் தலம்


சட்டம் காக்கும் தலம்

நியாயத்தை பார்க்காத
சட்டம் ஓர் குருடு

அல்லல்களை கேட்காத
சட்டம் ஓர் செவிடு

பணத்தின்முன் பேசாத
சட்டம் ஓர் ஊமை

நீதியினை நுகராத
சட்டம் ஓர் பேதை

உண்மையினை உணராத
சட்டம் ஓர் உளரல்

இன்றைய
இந்தியச் சட்டம்
உணர்ச்சியற்ற ஜடம்
உயிருள்ள பிணம்

உருவமில்லாத சட்டம் இன்று
உணர்ச்சியில்லாமல் போனதனால்
உயிரில்லாமல் இருக்குதையா
உலகில்நீதியின் உடல்களெல்லாம்

சட்டதேவதையின் கண்கள்
மூடப்பட்டுள்ளதன் காரணம்
பாரபட்சம் பார்க்கக்கூடாது என்பதற்கா?
இல்லை-
நியாயத்தையும் பார்க்கக்கூடாது என்பதற்கா?




சட்டதேவதையின் கைகளில்
தராசு உள்ளதன் காரணம்
நிறைகுறைகளை எடையிடுவதற்கா?
இல்லை-
பணத்தையும் பலத்தையும் அளப்பதற்கா?

நீதி என்பது
நீதிமன்றங்களில் காக்கப்படும் பொருளா?
இல்லை-
எடைக்கு இவ்வளவு என எறியப்படும் கழிவா?

நீதிமன்றங்களில் வழக்குகள்
ஒன்று
ஒத்தி வைக்கப்படுகின்றன
இல்லை
நிலுவையில் நிற்கின்றன

தீர்ப்பு என்பது
நீதிமன்றத்தில் வழங்கப்படுவதல்ல
பட்டிமன்றத்தில் வழங்கப்படுவது

நீதிமன்றங்கள் இருப்பது
தவறுகளை தடுப்பதற்கு
தண்டனைகளை தள்ளிப்போடுவதற்கல்ல

வக்கீல்கள் வாதாடுவது
சட்டங்களை காப்பதற்கு
கட்டணங்கள் வசூலிப்பதற்கல்ல

சிறைச்சாலைகள் இருப்பது
நீதியினை நிலைநாட்டுவதற்கு
கைதிகளை தாலாட்டுவதற்கல்ல

நீதிமன்றங்கள் நியாயத்தை
நிலைநாட்டும் தலங்களாக
நிமிர்ந்து நிற்பது
நிலைகெட்டுப் போயுள்ள
நிகழ்கால நிலவரத்தை
நிர்வகித்து உயர்த்துவதற்கு
நிச்சயம் அவசியமாகும்

அதற்கு சட்டங்கள்
தெய்வமாக வேண்டும்

சட்டங்கள் சாமியென்றால்
நீதிமன்றம் கோவிலன்றோ?

தவறு செய்வோர்க்கு
தண்டனை உறுதி
நியாயம் காப்போர்க்கு
நிம்மதி உறுதி

இவற்றை உறுதி செய்தால்
இனிமேல் சட்டங்கள் சாமியாகும்

சட்டங்கள் சாமியென்றால் 
நீதிமன்றம் கோவிலாகும் 

நானுமோர் ஏழை!


நானுமோர் ஏழை!

ஏழைகள் என்பவர்கள் யார்?
அவர்கள்
அரசியல்வாதிகளின்
அடிமை அகல்களா?
இல்லை
எழுத்தாளர்களின் கட்டுரைப் பொருளா?

ஏழை என்பவன்
எழுச்சியே பெறாதவனா?
இல்லை
ஏமாற்றத்தையே பெறுபவனா?

ஏழை என்பவன்
பணத்தைப் பிச்சை வாங்கி
வறுமையை வாரிக் கொடுக்கும்
பிச்சைக்கார வள்ளலாகி விட்டானா?

ஏழை என்பவன்
பணம் இல்லாதவனா?
இல்லை
மனம் இல்லாதவனா?

ஒவ்வொரு மனிதனும்
ஒருவிதத்தில் ஏழைகளோ?

ஆம்

உண்மை காப்பவன் பாவத்திலே ஏழை
நேர்மை காப்பவன் நியாயத்திலே ஏழை
நன்மை நல்குபவன் எழுமையில் ஏழை
பான்மை கெட்டவன் தரணியில் ஏழை
வலிமை மிக்கவன் பொறுமையில் ஏழை
தனிமை வாழ்பவன் இன்பத்தில் ஏழை
புலமை மிக்கவன் வாய்மையில் ஏழை
பகைமை வளர்ப்பவன் பாசத்தில் ஏழை
அடிமை வாழ்பவன் சுதந்திரத்தில் ஏழை
ஒருமை போற்றுபவன் துன்பத்தில் ஏழை
பெருமை பெற்றவன் சாவிலே ஏழை

அடடா!
அப்போது இத்தேசத்தில்
யார் தானப்பா ஏழை?

கண்ணன் கூறுகிறான்
'மனதில் திருப்தியற்றவனே ஏழை!'



அடடா!
சாதுரியமான பதில்
ஆனால்
சிறந்த பதில்!

ஆனால்
இந்த பதில்
இந்தியாவை வறுமையெனும்
இக்கோட்டிற்கு கீழேயல்லவா
தள்ளி விடுகிறது?

நாம் இந்தியப் பெருநாட்டில்
சிலபல கோடிகளே ஏழைகளென
இத்தனை நாள் எண்ணியிருந்தோம்?

இன்று
கண்ணன் சொன்னதை
கருத்தில் கொண்டால்
ஒட்டுமொத்த இந்தியாவே
ஏழைகளின் புகலிடமாகுமே?

ஏனென்றால் எவருக்கும்
எச்சமயமும் திருப்தியேயில்லை

கொள்ளையடித்தது போதும்
கொன்றுகுவித்ததும் போதும்
இருப்பதைகொண்டு வாழ்வோமென
இங்கேயோர் அரசியல்வாதியுண்டா?
இல்லை
குறைகூறுவதும் போதும்
புலம்பித்தள்ளுவதும் போதும்
இருக்கின்ற ஆட்சியே இன்பமென
இங்கேயோர் குடிமகன்தானுண்டா?

மேன்மை வரவர
மேலும் கேட்கிறான்
மேலும் கிடைத்தப்பின்னர்
மீண்டும் கேட்கிறான்

எத்தனை கிடைத்தாலும்
பித்தமனம் புலம்பும்!
ஒன்றுமே இழக்காமல்
ஓவென அழுதுருகும்!

திருப்தி இல்லாதவன்
திருந்தப் போவதில்லையெனில்
திறமை வெளிப்படாமல்
திரும்பவும் பிறந்திடுவான்

சரி!
நாம் இருப்பதைக் கொண்டு
திருப்தி அடைவோம்
ஆனால்
ஒன்றுமே இல்லாதவனுக்கு
எதைக் கொண்டு திருப்தி?

அடடா!
இந்த நாட்டில்
கேடுகெட்ட பணத்தை
தேடிவைக்கும் திருப்தியற்ற
ஜீவன்கள் இருந்தாலும்

உண்ண உணவின்றி
உடுத்த உடையுமின்றி
இருக்க இடமுமின்றி
இறந்துபோகும் உயிர்களும்
உள்ளனவே?

அவர்கல்
எதைக் கொண்டு திருப்தி அடைவார்கள்?
மனிதனாய் பிறந்ததேதம்
மனதிற்கு திருப்தி என்றா?

எழைகளே!
நீங்கள் மேலும் பணத்தை
கேளுங்கள்!
உயிர்வாழ அது உதவும்வரை!

ஏனெனில்
பணமில்லாத ஏழையாக வாழ்வதைவிட
மனதில்திருப்தியற்ற ஏழையாக வாழ்வதுமேல்!

அடிப்படைத் தேவையை கேளுங்கள்
அதன்பின்னர் கிடைப்பதையெல்லாம்
கொடுத்திடுங்கள்!

ஏனெனில், நமக்கு

உலகில் வாழும் உரிமை உண்டு
உலகின் இன்பங்கள் உனர்வதற்கல்ல!
வேலை செய்ய உரிமை உண்டு
வேறதன் பயன்கள் அடைவதற்கல்ல!

முதலில்
பணமில்லா ஏழைகளெனும்
பரீட்சையில் தேர்ந்திடுவோம்
அப்போது தான்
கண்ணனின் கணக்கு
கவனத்திற்கு வரும்

ஏனென்றால்
எவ்வளவு பணம் இருந்தும்
திருப்தி இன்றி வாழ்பவன்
பின்னர்
எத்தனை பிறவி எடுத்தாலும்
முக்தி இன்றி வாடிடுவான்

சரி!
திருப்தியோடு வாழ்ந்திடுவோம்
திருந்தியினிமேல் வாழ்ந்திடுவோம்
அடடா!
எனக்கு
எழுதியது போதுமென
திருப்திகொள மனத்துணிவில்லை
அனுபவித்தது போதுமென
துறந்துவிட தைரியமில்லை

கண்ணா!
உன் கணக்கில்
நானும் ஏழையாய் இருக்கிறேன்

ஒன்று
எனக்கு திருப்தி கொடு!
இல்லை
என் ஆசைகளை பூர்த்தி செய்!

எங்கே நிம்மதி?

எங்கே நிம்மதி?

மனதில் நிம்மதியின்றி
மனநிலை சரியுமின்றி
மயக்கத்தில் வாடியவொருவன்
மனமுருகி இறைவனிடம்தம்
மந்தநிலையை போக்க
மனத்திலே நிம்மதிவார்க்க
மன்றாடிக் கொண்டான்

கடவுள் அவனுக்கு
மூன்று வாய்ப்புகள் அளித்தார்

முதல் முறை வேண்டினான்

கடவுள் அவனைத்தம்
கடமைகள் முழுதையும்
கணக்காய் முடித்துஅவன்
கடனினை அடைக்கச்சொன்னார்

அவனும் செய்தான்
ஆனாலும் நிம்மதியில்லை

இரண்டாம் முறை வேண்டினான்

இறைவன் அவன்
இதயத்தில் ஆசைகளே
இல்லாதவாறு அடக்கச்சொன்னார்
அவனும் செய்தான்

மனத்தில் ஆசைகள்  இல்லாததால்
மனமும் மந்தமாய் மாறியது
மனதே காலியாய் கிடந்தபின்னர்
மதியும் தானே வெளிவந்தது

மனமே இல்லாமல் போனால்
மனதில் நிம்மதி எப்படி நிலவும்?

மூன்றாம் முறை அவன்
இறைவனை அழைக்கவில்லை
ஏனென்றால்

கடமைகளும் கனவுகளும்
கழிந்த பின்னர்
கதியில்லா இப்புலனும்மனமும்
காலத்தோடு கலந்துவிடுகிறது

இந்நிலையையும் கடந்து சென்றதனால்
இறைவன் அவனேயென்று உணர்ந்தான்
                       


தானே கடவுள் என்றுணர்ந்தபின்
தாழ்வும் உயர்வும் இனியுண்டோ?!
                       


Text Widget

Copyright © The Curious Cat | Powered by Blogger

Design by Anders Noren | Blogger Theme by NewBloggerThemes.com