இலஞ்சம் ஒழிந்துவிட்டது!
இலஞ்சத்தை ஒழிப்பதே தம்
இலட்சியமாய் கொண்டிருந்த
சமுதாயச் சீர்திருத்தவாதி ஒருவன்
சரியான பிரச்சாரம் செய்துவந்தபோது
பொதுமக்கள் அவனைச் சூழ்ந்து
பொறுப்பாயோர் வேண்டுகோள் விடுத்தார்கள்
"சரியான நேரத்திலே
அரிதான எம்வேலைகளை
அரியாசனத்தில் உள்ளோர்முதல்
பரிவில்லா அதிகாரிவரை
உரிமையுடனே முடித்துவைக்க
பரிந்துரைகள் செய்கின்ற
இலஞ்சத்தை ஒழிப்பதில்
இன்றுயேன் உனக்குமுனைப்பு?
அறிவில்லா இப்பிரச்சாரத்தை
அயல் நாட்டில் வைத்துக்கொள்
அறிவுள்ள இந்நாட்டில்
அநீதியை வளர்க்காதே" என்று!
இலஞ்சத்தை ஒழிப்பதே
இலட்சியமாய் கொண்டவன்
இலட்சரூபாய் கேட்டான்-தன்
இலட்சியத்தை வதைத்துக்கொள்ள!
அவன் கேட்டது
இலஞ்சம் அல்ல;
தன் இலட்சியத்தை
இழப்பதற்கு அவங்கேட்ட
'இழப்பீடு'!
இதுவே தான்
மற்றவர் நிலையும்!
மக்களின் வேலையை
முடித்து வைக்க
மற்றையோர் கேட்கும்
ரொக்கம் இலஞ்சமே அல்ல!
அடுத்தவர் வேலையை
அவரே செய்ய அது
அவர் பெறும் 'சன்மானம்'!
ஆம்...
இலஞ்சம் இன்று
'சன்மானம்' , 'வெகுமதி' , 'இழப்பீடு'
என்ற பெயர்களாய் திரிந்துவிட்டது....
ஆம்...
இன்று 'இலஞ்சம்' ஒழிந்துவிட்டது.
ஆம்....
ஒழிந்தே விட்டது இன்று
'இலஞ்சம்' என்ற வார்த்தை!
0 comments:
Post a Comment