தொன்று தொட்ட
காலம் முதல் இன்றுவரை தமிழர்களின் ஆர்வம் கலையிலும் அறிவியலிலும் இம்மியளவும் குறையாமல்
இருந்து வருகின்றன.அறிவுப்பசியும் கற்பனைதாகமும் தமிழருக்கு மிகுதி. அவர்கள் கலையை
அறிவுப்பூர்வமாய் ஆய்ந்தார்கள்;அறிவியலை உணர்வுப்பூர்வமாய் ரசித்தார்கள்! 'மையோ
மரகதமோ மழைமுகிலோ மறிகடலோ ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்' என ராமரை
வர்ணிக்கும் அதே சமயம் திடம்,திரவம்,வாயு,திட-திரவம் என்று பொருட்களின் 4 வகையான நிலைகளையும்
எடுத்துரைக்கிறார் கம்பர்.அவரைப் போலவே கலையையும் அறிவியலையும் நெருக்கித் தொடுத்து
நேர்த்தியான பல பாடல் வரிகளை தந்தவர்கள் வைரமுத்து மற்றும் மதன்கார்க்கி ஆவர். அவர்களின்
கற்பனை வளத்தில் உதித்த இரத்தினங்களில் பொறுக்கி எடுத்த சில வைர வரிகளை மட்டுமிங்கு
உற்று நோக்குவோம்.
சிறந்த பாடலாசிரியருக்கான
தேசிய விருதை 6 முறை வென்று சாதனை படைத்தவர் வைரமுத்து. மிக நுண்மையான அறிவியலயும்
செம்மையாக மொழிப்படுத்துபவர் அவர். உதாரணங்கள் பல.
பார்வை தெரியாத
பாவை ஒருவள் உருவங்களின் அவசியமின்மையை பற்றிப் பாடுவதே சூழ்நிலை.
'இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை'
என்று பாடுகிறாள்.
சத்தம் என்கிற சக்தியானது அலைகளாக பயணிக்கிறது.ஒளியைப் போலல்லாமல் ஒலி பயணிக்க ஒரு
ஊடகம் அவசியம்.விண்வெளியில் பார்க்க முடியும். ஆனால் காற்று இல்லாததால் கேட்க முடியாது.
இந்த உண்மையைத் தான் அழகாய் பாடினார் கவிஞர்.
நிலவிலும் தண்ணீரிலும்
பூமியை விட ஈர்ப்புவிசை குறைவு. அதனால் பொருட்களின் எடை குறையும். காதல் வசப்பட்டவனொருவன்
தன் மனம் கவர்ந்த மங்கையிடம் தன் உணர்வுகளைப் பாடும் போது இவ்வுண்மயை கூறுகிறார் கவிஞர்.
'நிலவில் பொருள்கள்
எடையிழக்கும்; நீரிலும் பொருள் எடையிழக்கும்;
காதலில் கூட
எடையிழக்கும்; இன்று கண்டேனடி!'
தாயின் கர்ப்பப்பையில்
சிசுவிற்கு உணவும் சத்துக்களும் பரிமாறப்படும்; கழிவுகளும் சுத்திகரிக்கப்படும். இவையனைத்தும்
ஒரு நீரூடகத்தில் தான் நிகழ்கின்றன என்கிறது அறிவியல்.
'தண்ணீர் குடத்தில்
பிறக்கிறோமோ!
கண்ணீர் கரையில்
முடிக்கிறோமோமோ!'
என இதை வர்ணிக்கிறார்.
கடலில் புயல்
மையம் கொள்வதால் ஏற்படும் காற்றழுத்த தாழ்வுநிலை, கரையில் பெரும் காற்றோட்டத்தையும்
கனத்த மழையையும் வரவழைக்கும் என்பது வாநிலை ஆய்வு அறிவியல்.
'புயல் மையம்
கொண்டால் மழை மண்ணில் உண்டு!
எந்த தீமைக்குள்ளும்
சிறு நன்மை உண்டு!'
என்பது கவிஞரின்
வாழ்நிலை ஆய்வு உளவியல்.
புலவரின் மகன்
மதன்கார்க்கியும் சளைத்தவரல்ல.Lyric Engineering எனும் பாடல் பொறியியலை தமிழில் அறிமுகப்படுத்தி
பல நுட்பமான பாடல்களை படைத்துள்ளார்.'நிழலை திருடும் மழலை','பென்சிலை சீவிடும் பெண்சிலையே'
என்பவை பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வைர வரிகள்.
'என் நீலப்பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்.
என் இஞ்சின்
நெஞ்சோடு உன்னெஞ்சை அணைப்பேன்'
என்பது பாடல்
வரி! Bluetooth என்ற தொழில்நுட்பத்தை நீலப்பல் என்று பெயர்த்தது கற்பனாசக்தியின் உச்சகட்டம்!
புகைப்பட வல்லுனர்
ஒருவர், தன் புகைப்படப் கருவியில் தன் காதலியை காண்கிறார்; கூடவே ஒரு ஆண் நன்பரோடு
அவள் சிரித்து பேசுவதை பார்க்கிறார். தன் மனதில் தன் காதலைப் பற்றி ஒரு உறுதியற்ற சலனம்
ஏற்படுகிறது. அந்த நிலை தான் எடுக்கும் புகைப்படத்திலும் பிரதிபலிக்கிறதாம்.
'ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை' குவியம்: Focus.
குவியம் என்ற
வார்த்தையை பிரபலப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
'அடி பெண்ணே
என் மனது எங்கே? ரேடார் விளக்குமா?
அடி என் காதல்
ஆழம் சோனார் அளக்குமா?'
என்று காதலன்
காதலியை பார்த்து கேட்பதாக பாடல் எழுதியுள்ளார் கார்க்கி.
இருப்பிடமறியா
பொருட்களை கண்டுபிடிக்கும் ரேடார்; கடலுக்கடியில் உள்ள பொருளின் ஆழமறியும் சோனார்;
இந்த அறிவியல் சாதனங்களை அழகாய் இவர் பாடி விட்டுப் போனார்!
Higgs
Boson என்ற துகளை கண்டுபிடித்ததே இயற்பியலின் புதிய சாதனையாக உலகெங்கும் கொண்டாடப்பட்டது!
அதற்கு 'கடவுள் துகள்' என புனைப்பெயர் கொடுத்து கவிதை செய்தார் கார்க்கி.
'எடையில்லா
கடவுள் துகள் போலே மிதக்கிறேன்
வெள்ளை வண்ண
தடையில்லா வழியின் மேலே!' என்று.
கவிதையில் நவீன
அறிவியல் தகவல்களை கொடுத்து நம் பாடல்களை உல்கத்த்ரத்திற்கு உயர்த்தியுள்ளார் கார்க்கி.
வைரமுத்து மற்றும்
மதன்கார்கியின் அறிவியல் ஆழமும் கற்பனை வளமும் சொல்லி மாளாது. அர்த்தமில்லா பாடல் வரிகள்
குவிந்து கிடக்கும் இக்காலத்தில், இதுபோன்ற பாடல்களே குவியமுள்ள சொற்பேழையாக திகழ்கினறன.
பாடலின் இசையை ரசிக்கும் நாம், அதன் வரிகளையும் சற்றே உணர்ந்து ரசித்தோமானால், தமிழும்
வளரும்; அறிவும் பெருகும்!
வாழ்க தமிழ்!