ஹரீஷ்: கல்லூரி மலருக்கு முதல் முறையாக தமிழ் பேட்டி எடுக்க
வேண்டும் என எண்ணிய போது, தமிழ் எழுத்தாளர் ஒருவரை பேட்டி எடுத்து துவங்கினால் சிறப்பாக
இருக்கும் என்று உங்களை தேர்வு செய்தோம்.
முதல் முயற்சியிலே என்னை சந்தித்ததற்கு மிகவும் நன்றி.
இன்றைய இளைஞர்கள் தமிழ் குறித்து ஆர்வமாக இருக்கிறார்களா என்ற எனது சிறிய சந்தேகத்தை
இன்று நீங்கள் போக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி!
திவ்யா:
சுமதி என்ற இயற்பெயரை 'தமிழச்சி' என மாற்றிக்
கொண்ட காரணம் என்ன? தமிழ்நாட்டுப் பெண்கள் அனைவரும் தமிழச்சி என கூப்பிட்டால் திரும்ப
பார்க்கும் உரிமை உள்ளபோது நீங்கள் இந்த பெயரை தேர்வு செய்ததன் காரணம்?
நான் எழுத வந்த சமயம் சுமதி என்ற
பெயரில், கவிதைப்பரப்பிலும் புதினப்பரப்பிலும் இருவர் இயங்கிக் கொண்டிருந்தனர். குழப்பத்தை
தவிர்க்க புனைப்பெயர் தேடிய பொழுது, யோசனையின்றி எடுத்த பெயர் தான் தமிழச்சி. தமிழ்
கிராமத்து பெண்ணின் பின்புலம் 'தமிழினி' , 'தமிழி' என்ற சொற்களில் வந்தாலும், 'தமிழச்சி'
என சொல்லும் போது ஏற்படும் பெண்மை பெருமிதம் இவற்றில் பிரதிபலிக்கவில்லை. தமிழ் அடையாளம்,
பெண்மை பெருமிதம், இரண்டும் சேர்ந்ததே தமிழச்சி.
மொழிபெயர்ப்பு Translation என்பதிலிருந்து Transcreationக்கு வந்து விட்டது. அதாவது
மொழிபெயர்ப்பே இன்னொரு படைப்பு.ஆங்கிலத்தில் உள்ள Romantic Poets எனப்படும் இயற்கை
சார்ந்த கவிஞர்கள், ஆப்பிரிக்க பெண் கவிஞர்கள், புலம்பெயர்ந்து வசிக்கும் தமிழ் கவிஞர்களின்
கவிதைகளை மொழிபெயர்க்க ஆசை. தமிழை வேராகவும் மற்ற மொழிகளை சிறகுகளாகவும் வைத்துக் கொண்டால்
பல நாட்டுக் காவியங்களையும் தமிழிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.அதனால் தான் மொழிபெயர்ப்பு
ஒரு முக்கிய செயல்பாடு என்று நான் எண்ணுகிறேன்.
கௌதம்: ஒரு பெண் எழுத்தாளராக நீங்கள் சந்தித்த சவால்கள்
குறித்து?
சவால்கள் என எனக்கு பெரிதாய்
ஏதுமில்லை. என் அப்பாவும் அம்மாவும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள் என்பதால் நான் நினைத்ததை
படிக்கவும், பேசவும், எழுதவும், எனக்கு சுதந்திரம் இருந்தது. எனக்கு சவாலாக இல்லை என்பதால்,
அனைத்து பெண்களுக்கும் அப்படி என்று கூறிவிட முடியாது. குறிப்பாக பெண் எழுத்தாளர்களுக்கு,
அவர்களது குடும்பமும், சாதீய ஆதிக்கமும் ஒரு பெரிய தடையாக இருக்கிறது. மனதிற்கு பட்டதை
துணிச்சலாக எழுதும் சாதகமான சூழ்நிலை இல்லாதது ஒரு பெரிய சவால். எழுத்தாளராய் மட்டுமிருந்து
ஒருவர் வாழ்க்கை நடத்தி விட முடியாது என்பதே ஒரு மிகப்பெரிய சவால் என்று நான் நினைக்கிறேன்.
ஹரீஷ்: ஆங்கில புத்தகங்கள் பல லட்சம் பிரதிகள் விற்கின்றன.
ஆனால் தமிழில் அப்படி விற்கும் நூல்கள் இல்லை. தமிழ் புத்தகம் வாசிக்கும் பழக்கமும்
ஆர்வமும் குறைந்து வருகிறதா? அதை சரிசெய்ய என்ன செய்யலாம்?
'குறைந்து வருகிறது' என சொல்வதை
விட 'இல்லை' என்று தான் நான் சொல்வேன். என் வீட்டுப் பிள்ளைகளை நான் தமிழ் கவிதைகள்
சொல்லியே வளர்த்தாலும், ஒரு ஆங்கில நாவலை இரவோடு இரவாக வாங்கவே வரிசையில் நிற்கிறார்கள்.
ஒரு தமிழ் புத்தகத்திற்கு அப்படி நடப்பதே இல்லை. நம் அளவுகோல்கள் மேலை நாட்டை சார்ந்தே
உள்ளது.எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கதை சொல்லி வளர்க்கிறார்கள்?
இரும்புகை மாயாவி, ரெட்டைவால் ரங்குடி, இவையெல்லாம் இன்று யாருக்குமே தெரியாமல் போய்விட்டது.
தமிழில் இத்தனை விஷயங்கள் உள்ளது என குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.தமிழ் புத்தகங்களுக்கான
Demandஐ நாம் தான் உருவாக்க வேண்டும். இந்த பொறுப்பு பெற்றோர்களுடையது.
திவ்யா:
நம் நாட்டுப்புறக் கலைகள் என்றாலே சினிமாவில் சித்தரிக்கப்படுகின்ற நடனம் தான் சாதாரண
மக்கள் மனதில் தோன்றுகின்றது. நம் நாடுப்புறக் கலைகள் நழிவடைந்து வருவதற்கு ஊடகங்களிலிருக்கும்
சினிமாவின் ஆதிக்கம் தான் காரணமா?
இதே கேள்வியை திரைத்துறையினரிடம் கேட்டால், மக்கள்
அதைத் தான் விரும்புகிறார்கள் என்று சுலபமாகச் சொல்லி தப்பித்து விடுவார்கள். ஆனால்,
நான் உங்கள் பக்கம் தான். அவர்களுக்கிருக்கும் சமூகப்பொறுப்பை ஏற்கவேண்டும். சினிமாவில்
காட்டப்படும் ஆபாசமும், பெண்கள், திருநங்கைகளுக்கு எதிராக வரும் வசனங்களையெல்லாம் அந்த
இயக்குனர் நினைத்தால் தவிர்க்கலாம். சினிமாவை மட்டும் ஒரு காரணமாக நான் சொல்லவில்லை.
ஆனால், சினிமா ஒரு முக்கியக் காரணம் என்பது என் கருத்து.
ஹரீஷ்: 'பிசாசு'
படத்தில் திரைப்பாடல் எழுதிய அனுபவம் குறித்து?
நிறைய பாடல் எழுதும் வாய்ப்புகள்
வந்தும் அவற்றை நான் தவிர்த்து வந்தேன். ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு பாடல் எழுத என்னால்
இயலாது. ஆனால் பிசாசு படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சூழல் வித்தியாசமானது. ஒட்டுமொத்த
உலகத்திற்கான கருணையை வேண்டும் ஒரு கவிதை சூழல் என்பதாலும், இயக்குனர் பாலா மற்றும்
மிஷ்கின் மீது இருந்த மரியாதையினாலும் இந்த பாடல் எழுதும் வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்.
மிஷ்கின் சிறந்த படிப்பாளி; கவிஞரும் கூட. அதனால் எழுதுவதற்கான் சுதந்திரம் எனக்கு
இருந்தது. இந்த பாடல் என் மனிதிற்கு மிகவும் நெருங்கியது.
[பாடலின் ஒவ்வொரு வரிக்கும் கவிஞர்
பொருள் விளக்க, அதை கேட்டு நாங்கள் திளைத்தோம்.]
கௌதம்: அழிந்து வரும் நாடகக்கலையை புதுப்பிக்க என்ன செய்யலாம்?ஒரு
நாடகக் கலைஞராய் உங்கள் கருத்து?
நாடகக் கலை அழிந்து வருவது மிகவும்
வருந்தற்குரிய விஷயம். பழைய நாடகங்களுக்கு சமகால interpretation தரும் நாடகங்களுக்கு
வரவேற்பு இருக்கும். உதாரணதிற்கு, 'வஞ்சமகள்' என சூர்ப்பணகை நாடகம் ஒன்று நாங்கள் நடத்தினோம்.
இன்று பெண்களுக்கு எதிராக நிலவும் அமிலவீச்சையும், காவியத்தில் வரும் மூக்கறுத்தலையும்
உவமைப்படுத்தி நாடகக் கரு ஆக்கினோம். இவை நாடகக் கலையை relevantஆக ஆக்கும். அது தவிர
தமிழுக்கென்று பிரத்தியேகமாக 'National School of Drama' போன்ற ஒன்றை துவங்க ஆசை.
Left to Right: Gowtham S, Dhivyapriya N, Dr.Thamizhachi
Thangapandiyan, Harish S
|
ஹரீஷ்: 'Tamil Literature towards new direction' என்ற
தங்களின் ஆய்வுக் கட்டுரைப் பற்றி?
வெறும் பழம்பெருமைகளை சொல்வதோடு
நிறுத்தாமல், இன்றைய சூழலுக்கு தமிழ் இலக்கியத்திலிருந்து என்ன எடுத்துக் கொள்ளலாம்
என்பதே அந்த ஆய்வுக்கட்டுரை. பழைய காவியங்களையும், காப்பியங்களையும் 21ம் நூற்றாண்டின்
கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்வதே அதன் நோக்கம்.
திவ்யா: மொழி என்பது
நம் கருத்தை வெளிப்படுத்த உதவும் ஓர் கருவி. அப்படியிருக்க, புளூடூத், ஃபேஸ்புக் போன்ற
வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு மொழியை வளர்க்கலாமா?
மொழி என்பது நெகிழ்ந்துக் கொடுத்தால் தான் வளர முடியும்.
சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் புதிதாக இணைக்கப்பட்ட தமிழ் வார்த்தைகளின் பட்டியல்
வெளியிடப்பட்டது. Technical terms எனப்படும் தொழில்நுட்பச் சொற்களை, உதாரணத்திற்கு,
புளூடூத், ஃபேஸ்புக், இவையெல்லாம் உள்வாங்கிக்கொள்வதில்
தவறில்லை. பிற நாடுகளுக்குச் செல்லும்போது, தாய்மொழியில் இதுப்போன்ற சொற்களைப் பழகியிருந்தால்,
அங்கேச் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். ஆனால் இந்த நெகிழ்வுத் தன்மையின் எல்லை எது
என்பதைத் தெளிவாகப் புரிந்துக்கொள்ள வேண்டும். Proper nouns அதாவதுப் பெயர்கள், வழக்குச்
சொற்கள் (காஃபி போன்றவை), தொழில்நுட்பச் சொற்கள் ஆகியவற்றை வலிந்துத்
தனித்தமிழில் மொழிபெயர்க்க வேண்டியதில்லை. அதே சமயத்தில் அடிப்படை அமைப்பினை மாற்றாமலிருக்க
வேண்டும்.
கௌதம்:உங்கள்
எழுத்தினை ஊக்குவிக்கும் சூழ்நிலை ஏதாவது உள்ளதா? அது என்ன? அதை நீங்கள் எப்படி அமைத்துக்
கொள்வீர்கள்?
அப்படி எதுவும் இல்லை. புத்தி
சார்ந்து எழுதுவதற்கு சூழல் வேண்டும். உதாரணத்திற்கு, விமர்சனக் கட்டுரை எழுதுவதற்கு
ஒரு அமைதியான சூழல் வேண்டும். ஆனால், உணர்வு சார்ந்து எழுதும்பொழுது அது தேவையில்லை.
வாழ்க்கை ஒரு சம்மட்டிக்கொண்டு ஓங்கி அடிக்கும்பொழுது, எந்த இடமாகயிருந்தாலும், காலமாகயிருந்தாலும்;
இரண்டு நிமிடம், பேப்பர், பேனா போதும் எழுதுவதற்கு. சூழ்நிலை அங்கே முக்கியமில்லை.
நான் உணர்வு சார்ந்து ரசிக்க எனக்கு சூழ்நிலை வேண்டும்; ஆனால் படைக்க சூழல் ஒரு முக்கிய
அளவுருவாகத் தோன்றவில்லை.
ஹரீஷ்: இன்றைய இளைஞர்கள் யாரை முன்மாதிரியாக எடுத்துக்
கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
நடிகர்களையோ, பெரும் முதலாளிகளையோ
தான் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை.
நமக்கான முன்மாதிரிகள் நமக்கு அண்மையிலேயே இருக்கிறார்கள்.
உங்கள் அம்மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவளது உலகமே உங்களைச் சுற்றி தான் இயங்குகிறது.
எளிய அறம் சார்ந்து இயங்குபவர்கள், சமுதாயத்துக்கு உண்மையிலேயே உதவுபவர்கள் என எக்கச்சக்க
பேரை முன்மாதிரியாய் எடுத்துக் கொள்ளலாம்.
திவ்யா:இறுதியாக,
எங்கள் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் கருத்து...
தமிழச்சி: இந்தக் கால
இளைஞர்களிடம் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நம்பிக்கைக்குறியவர்களாகவும், சமநோக்குச்
சிந்தனை உடையவர்களாகவும் திகழ்கிறார்கள். அவர்களிடம் பகிர வேண்டிய சிந்தனை இதுதான்.
கட்டாயம் அனைவரும் சங்க இலக்கியங்களை படியுங்கள். நம் வாழ்வின் அனைத்து பிரச்சினைகளுக்கும்
சங்க இலக்கியத்தில் விடையுண்டு. உங்கள் வெற்றி என்பது சமுதாயம் சார்ந்த பணம் சார்ந்த
விஷய்மில்லை என்ற தெளிவோடு இருங்கள். உங்கள் வெற்றி உங்கள் கையில்!