It gets curiouser and curiouser!

Monday 17 December 2012

சட்டம் காக்கும் தலம்


சட்டம் காக்கும் தலம்

நியாயத்தை பார்க்காத
சட்டம் ஓர் குருடு

அல்லல்களை கேட்காத
சட்டம் ஓர் செவிடு

பணத்தின்முன் பேசாத
சட்டம் ஓர் ஊமை

நீதியினை நுகராத
சட்டம் ஓர் பேதை

உண்மையினை உணராத
சட்டம் ஓர் உளரல்

இன்றைய
இந்தியச் சட்டம்
உணர்ச்சியற்ற ஜடம்
உயிருள்ள பிணம்

உருவமில்லாத சட்டம் இன்று
உணர்ச்சியில்லாமல் போனதனால்
உயிரில்லாமல் இருக்குதையா
உலகில்நீதியின் உடல்களெல்லாம்

சட்டதேவதையின் கண்கள்
மூடப்பட்டுள்ளதன் காரணம்
பாரபட்சம் பார்க்கக்கூடாது என்பதற்கா?
இல்லை-
நியாயத்தையும் பார்க்கக்கூடாது என்பதற்கா?




சட்டதேவதையின் கைகளில்
தராசு உள்ளதன் காரணம்
நிறைகுறைகளை எடையிடுவதற்கா?
இல்லை-
பணத்தையும் பலத்தையும் அளப்பதற்கா?

நீதி என்பது
நீதிமன்றங்களில் காக்கப்படும் பொருளா?
இல்லை-
எடைக்கு இவ்வளவு என எறியப்படும் கழிவா?

நீதிமன்றங்களில் வழக்குகள்
ஒன்று
ஒத்தி வைக்கப்படுகின்றன
இல்லை
நிலுவையில் நிற்கின்றன

தீர்ப்பு என்பது
நீதிமன்றத்தில் வழங்கப்படுவதல்ல
பட்டிமன்றத்தில் வழங்கப்படுவது

நீதிமன்றங்கள் இருப்பது
தவறுகளை தடுப்பதற்கு
தண்டனைகளை தள்ளிப்போடுவதற்கல்ல

வக்கீல்கள் வாதாடுவது
சட்டங்களை காப்பதற்கு
கட்டணங்கள் வசூலிப்பதற்கல்ல

சிறைச்சாலைகள் இருப்பது
நீதியினை நிலைநாட்டுவதற்கு
கைதிகளை தாலாட்டுவதற்கல்ல

நீதிமன்றங்கள் நியாயத்தை
நிலைநாட்டும் தலங்களாக
நிமிர்ந்து நிற்பது
நிலைகெட்டுப் போயுள்ள
நிகழ்கால நிலவரத்தை
நிர்வகித்து உயர்த்துவதற்கு
நிச்சயம் அவசியமாகும்

அதற்கு சட்டங்கள்
தெய்வமாக வேண்டும்

சட்டங்கள் சாமியென்றால்
நீதிமன்றம் கோவிலன்றோ?

தவறு செய்வோர்க்கு
தண்டனை உறுதி
நியாயம் காப்போர்க்கு
நிம்மதி உறுதி

இவற்றை உறுதி செய்தால்
இனிமேல் சட்டங்கள் சாமியாகும்

சட்டங்கள் சாமியென்றால் 
நீதிமன்றம் கோவிலாகும் 

0 comments:

Post a Comment

Text Widget

Copyright © The Curious Cat | Powered by Blogger

Design by Anders Noren | Blogger Theme by NewBloggerThemes.com